Monday, 26 October 2015

மீண்டும் விதைக்கலாம் தமிழ்

"வீரம் சேர்ப்பது தாய்ப்பால் " என்றான் பாரதி . ஆனால் இன்று சில தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தொடர்ச்சியாக தாய்ப்பால் ஊட்டினால் தங்களது அழகு பாதிக்கப்படும் என்ற தவறான கருத்து நிலவுவதைப் போல தமிழில் பேசினால் தனக்கு இழுக்கு என்பதாக பலர் தவறான எண்ணம் கொண்டுள்ளார்கள். ஆனால் ஏனோ நான்  மழலைப்  பருவத்தில் எனது தாயார் புகட்டிய தாய்ப்பால் வீணாகிப் போனதாகவே கருதிகிறேன். காரணம் நான் எல்லா விசயங்களிலும் வீரனாக இல்லை. குறிப்பாக மொழி விசயத்தில் நானும் ஒரு கோழையே. இதன் காரணத்தை ஆராய்ந்த பொழுது எனக்கு சித்தர்கள் கூறிச் சென்ற பழமொழி நினைவிற்கு வருகிறது " காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் என மண்டலம் கொண்டால் கோலூன்றி நடக்கும் கிழவன் கூட கோல் வீசி நடப்பான் " ஆனால் இன்று நானும் எனது சமுதாய மக்களும் ஒரு மண்டலம் அல்ல பல மண்டலங்களாக நாகரிகம் என்ற பெயரில் ஆங்கிலம் என்னும் போதையால் தள்ளப்பட்டுள்ளோம். முழுமையாக 20 நிமிடங்கள் கூட ஆங்கிலத்தில் பேசத் தெரியாத நான் 300 ஆண்டிற்கு முன் வந்ததை முன்னிறுத்தி பல்லாயிரம் ஆண்டு முன் தோன்றிய தமிழை வினைச் சொல்லிற்கு ( bus ல வந்தேன், சென்றேன் ) மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். ஆனால் இந்த நிலை நிரந்தரமாக நீடிக்க விரும்பவில்லை. வீரம் நிறைந்த என் தாய் தமிழ் நாட்டில் சிறு வயதில் எனக்கு பல நேரங்களில் என் தாய்  தமிழ் கதைகளைக் கூறி சோறூற்றினாள். அப்படி கூறியதை நான் நினைவு படுத்தி பார்க்கையில் கூட அதில் ஆங்கில மொழி கலந்ததாகத் தெரியவில்லை. நம்மை எதிர்த்துப் போராட வழியில்லாமல் நம் நாட்டை விட்டு ஓடிய வெள்ளையர்கள் கோழைகள் ஆனால் நாம் அந்த கோழைகளின் தாய் மொழியைப் பின்பற்றி வருகிறோம் " உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமெனில் நீ யாரையும் திரும்பிப் பார்க்காதே " - ஹிட்லர். ஆனால் இன்று தூய மொழியில் பேசினால் சமுதாயம் என்னை ஏளனம் செய்கிறது. அதற்காக நான் ஆங்கிலம் வேண்டாமென்று கூறவில்லை மாறாக தமிழை மறக்க வேண்டாம் என நினைக்கிறேன். கனிம வளங்கள் நிறைந்த நம் நாட்டில் இப்பொழுது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைப் போல தமிழ் மொழியும் வற்றிக்கொண்டு உள்ளது .இதை மீண்டும் விதைக்கலாமே? அப்படியானால் இதை யார் செய்வது? நான் தானே செய்ய வேண்டும் அப்படியெனில் எனக்கு வழிகாட்டுவதுயார்? என்னை வளர்த்த பெற்றோர்களா? ( அ ) ஆசிரியர்களா இல்லை நாளைய படைப்பாளியாகத் தன்னை செதுக்கிக் கொண்டிருக்கும் கவிஞர்களா, எழுத்தாளர்களா, இலக்கியவாதிகளா முடிவு உங்களிடமா இல்லை முயற்சி என்னுடையதா? எனக்கும் நிலம் உண்டு. நிலத்தில் விளைச்சல் சரியாக இல்லையென்றால் பல விதமான உரங்களைப் பயன்படுத்தி அவற்றை சரி செய்ய முயற்சி செய்வேன். அதைப் போல எனது தமிழும் சில ஆண்டுகளாக நோயுற்று மெலிந்து கொண்டு வருகிறாள். தேவை மருந்து இல்லை. மருத்துவர் தான். ஏராளமான மருத்துவர்களை உருவாக்கியதாக பெருமை கொள்ளும் நாம் தமிழ் மொழி(பற்றுள்ளவர்களை ) மருத்துவர்களை முழுமையாக இந்த சமூகத்திற்கு தராமல் பாராமுகமாக இருப்பது ஏன்? மருத்துவனுக்கு மனித நேயம் தேவை. ஆனால் நமது தாய்த்  தமிழ் மனித நேயம் மிக்கவள். நம்மையும் நமது முன்னோர்களையும் இணைத்தது தமிழ் தான். நாம் அனைவருமே மனித நேயம் மிக்கவர்கள் தான். அதனால் தான் நம்மையும் அறியாமல் சிறிது சிறிதாக அதற்கு அச்சாரமாக முதலில் ஆங்கில மருந்து தவிர்த்து சித்தர்கள் கூறிச் சென்ற தமிழ் மருத்துவத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறோம். சமீப காலமாக நமது உணவிலும் மாற்றம் விரும்பி பழைய உணவிற்குத்திரும்பிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் பல சரித்திரங்கள் நமது மொழிக்கு உண்டு. அதைப் போல மீண்டும் தமிழை விதைப்போம். இதன் பெருமையை உலகுக்கு உறக்கச் சொல்வோம். கண்ணதாசன் அழகாக ஒரு மேடையில் கூறினார் எனக்கு மதம் இந்து மதம் ஆனால் எனக்கு இன்னொரு மதமும் உண்டு அது தாமதம் " என நகைச்சுவையாக தமது குறையைக் கூறி அடுத்த மேடையில் சரி செய்து விடுகிறேன் என்று கூறுவார். அதைப் போல நமக்கும் தமிழ் மொழிப் பற்று உண்டு ஆனால் சமீப காலமாக அதை நாம் மறந்து விட்டோம். மறதி என்பது இயல்பு தான் அது நிரந்தரமாக கூடாது. எப்படி நமது வீட்டு அலமாரியில் வீட்டுப் பத்திரம் பத்திரமாக உள்ளதோ அதைப் போல அதில் உள்ள தமிழையும் காப்போம்.               
வாழ்க   வளமுடன்
வளர்க தமிழ்.
     அன்புடன்
புதுகை அப்துல்.

4 comments:

 1. அருமை நண்பரே
  தங்களின் பதிவினை சிறு சிறு பத்திகளாகப் பிரித்து எழுதினீர்களேயானால் பதிவு மேலும் பொலிவுபெறும் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. நன்றி. கரந்தை ஐயா. கண்டிப்பாக தவறை திருத்திக் கொள்கிறேன்

   Delete
 2. தமிழ் மொழியைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் பயன்படுத்தாமல் ஒதுக்கிக்கொண்டுவரும் நிலைமை, மிகவும் ஆபத்தான கட்டத்தில் போய் நிற்கிறது. உங்களைப் போன்ற இளைஞர்கள்தாம் உறுதியோடு நின்று தமிழ்ப் பயன்பாட்டை அதிகப்படுத்த உதவவேண்டும். நமது பள்ளிகளில் ஆங்கில மூலம் படிப்பு சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துவிட்ட பிறகு, நம் குழந்தைகள் தமிழை விரும்பிப் படிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, வீட்டில் உள்ள பெரியவர்கள்தான் அவர்களைத் தன்வசப்படுத்தி, நம் தாய்மொழிமீது அவர்களுக்குப் பற்றுதலை ஏற்படுத்தவேண்டும். ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் செய்யவேண்டிய தலையாயக் கடமை இது. - இராய செல்லப்பா

  ReplyDelete